சென்னை:
இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும், பிரதிக்ஷா அறக்கட்டளை பொறுப்பாளருமான பத்மபூஷன் ஸ்ரீ – கிரிஸ் கோபாலகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது 2024ஐ இன்று டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவை வழங்கி கவுரவித்தது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதானது, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் குறிப்பாக மூளை ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டது.
கிரிஸ் கோபாலகிருஷ்ணனுக்கு இந்த விருதை, டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி. மோகன், துணைத் தலைவர் டாக்டர் ரஞ்ஜித் உன்னிகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா ஆகியோர் முன்னிலையில் சங்கர நேத்ராலயா தலைவர் டாக்டர் டி.எஸ். சுரேந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் நீரிழிவு அருங்காட்சியகமான ‘மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை நீரிழிவு அருங்காட்சியகம்’ திறப்பு விழா நடைபெற்றது. இந்த அருங்காட்சியகம் சிறுசேரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை கிரிஸ் கோபாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
நீரிழிவு ஆராய்ச்சிக்கான உலக புகழ்பெற்ற மையமாக, மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையில் உள்ள நீரிழிவு அருங்காட்சியகம், நீரிழிவு ஆராய்ச்சியின் பல ஆண்டு கால வரலாற்றைக் கவுரவிக்கும் மற்றும் விவரிக்கும் பிரத்யேக அருங்காட்சியகமாக இருக்கும். அதன் ஆரம்பகால சிகிச்சை, கடந்து வந்த பாதை, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் உலகெங்கிலும் உள்ள மூத்த விஞ்ஞானிகளின் பிற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவையும் இங்கு இடம் பெற்றுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் MDRF இன் தலைவர் டாக்டர் வி. மோகன் கூறுகையில்:
மூளை ஆராய்ச்சியில் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் மேற்கொண்ட பணியானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மூளை ஆராய்ச்சி மையம் போன்ற அவரது சமூக மேம்பாட்டு திட்டங்கள், நரம்பியல் பிரச்சினைகள் உட்பட பல்வேறு சுகாதார சவால்களை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவரது பங்களிப்பை அங்கீகரிப்பதை ஒரு பெரிய கவுரவமாக நாங்கள் கருதுகிறோம். மேலும் வரும் காலங்களில் மருத்துவத் துறைகளில் இதுபோன்ற பல்வேறு சமூகநல முயற்சிகளை பலரும் மேற்கொள்வார்கள் என்று நாம் உறுதியாக நம்புவோம் என்று பேசினார்.
விருதை பெற்ற பத்மபூஷன் – ஸ்ரீ கிரிஸ் கோபாலகிருஷ்ணன் பேசுகையில்:
மருத்துவ அறிவியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி நீரிழிவு ஆராய்ச்சியில் முன்னோடியாக திகழும் டாக்டர் மோகனிடமிருந்து இந்த விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீரிழிவு அருங்காட்சியகத்தின் திறப்பு விழா மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நீரிழிவு ஆராய்ச்சியின் வரலாறு மற்றும் முன்னேற்றங்களை விவரிக்கிறது. இறுதியில் இந்தியாவை உயர்தர ஆராய்ச்சியில் உலகளாவிய தலைவராக மாற்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது, அதேபோல ஆராய்ச்சி துறையிலும் இதுபோன்ற முன்னேற்றங்கள் ஏற்படும் என்று நான் நம்புகிறேன். மூளை ஆராய்ச்சி மையமானது மூளை செயல்பாட்டின் பிரச்சினைகளை கண்டறிந்து, புதுமையான சிகிச்சை முறைகளுக்கு வழி வகுக்கிறது. உயர்தர ஆராய்ச்சியில் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என்று பேசினார்.
டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா பேசுகையில்:
மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையில் திறக்கப்பட்டுள்ள நீரிழிவு அருங்காட்சியகம், இந்தியாவில் நீரிழிவு ஆராய்ச்சியின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். இங்கு பல ஆண்டு கால நீரிழிவு ஆராய்ச்சியின் வரலாறு மற்றும் அறிவியல் முன்னேற்றங்கள் ஆகியவை இடம் பெற்று இருப்பதோடு உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார்.
டாக்டர் மோகன்ஸ் டயாபடிஸ் ஸ்பெஷாலிட்டி சென்டர் பற்றி:
1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சென்னையை தலைமையிடமாக கொண்டு நிறுவப்பட்டது டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம். இன்று நீரிழிவு நோயாளிகளுக்கு விரிவான சேவைகளை வழங்கும் இந்தியாவின் முன்னணி நீரிழிவு மையமாக விளங்குகிறது. டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் இந்தியாவில் 50 க்கும் மேற்பட்ட நீரிழிவு மையம் மற்றும் மருத்துவமனைகள் கொண்டுள்ளது. நீரிழிவு நோயாளிகள் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும். 5.5 லட்சத்துக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் ஆலோசனைக்காக டாக்டர் மோகன்ஸ் டயாபடிஸ் சென்டர் அணுகியுள்ளனர். சென்னையில் கோபாலபுரத்தில் இதன் முதன்மை மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு நீரிழிவு பராமரிப்பு, நீரிழிவு கண் பராமரிப்பு, நீரிழிவு கால் பராமரிப்பு, நீரிழிவு இதய பராமரிப்பு, நீரிழிவு பல் பராமரிப்பு, நீரிழிவு பக்கவிளைவுகள் தடுப்பு, உணவு ஆலோசனை, நீரிழிவு பராமரிப்பு போன்றவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு 89391 10000 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். அல்லது www.drmohans.com மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் பார்க்கலாம்.