பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.9.88 கோடி மதிப்பீட்டில் மாணவ, மாணவிகள் தங்கி பயிலும் வகையில் கட்டப்பட்டு வரும் விடுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் 100 கல்லூரி மாணவிகள் தங்கி பயிலும் வகையில் தரை தளம் 420.00 சமீ, முதல் தளம் 412.00 ச.மீ, இரண்டாவது தளம் 412.00 ச.மீ, போர்டிகோ பகுதி 18.50 ச.மீ என மொத்தம் 1262.50 ச.மீ அளவில் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவிகளுக்கான விடுதி கட்டடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் 100 கல்லூரி மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் தரை தளம் 420.00 சமீ, முதல் தளம் 412.00 ச.மீ, இரண்டாவது தளம் 412.00 ச.மீ, போர்டிகோ பகுதி 18.50 ச.மீ என மொத்தம் 1262.50 ச.மீ அளவில் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான விடுதி கட்டடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் மேற்கூரை பணிகள் முடிவடைந்து மேலும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதனைத்தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் வேப்பந்தட்டை கல்லூரி மாணவியர் விடுதியின் அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்கள். மேலும் இந்த விடுதிக்கு மாற்றாக தாட்கோ மூலம் 50 மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய விடுதிக்கான கட்டுமான பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
பின்னர், மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், வழங்கப்படவுள்ள மின்கல வாகனத்தின் செயல்பாடுகள் குறித்து வாகனத்தை இயக்கி பார்த்து ஆய்வு செய்தார்கள். தூய்மை பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தரம் பிரித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை சேகரித்து குப்பை கிடங்கிற்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு மின்கல வாகனம் பயனுள்ளதாக இருக்கும். 20 ஊராட்சிகளுக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் 22 வாகனங்கள் வழங்கப்படவுள்ளது. எனவே இந்த வாகனங்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு அனைத்து ஊராட்சிகளிலும் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக வைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்நிகழ்வுகளில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திரு.கே.ராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.சிவசங்கர், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சரவணன், வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.மரியதாஸ், திரு.செல்வமணியன், வேப்பந்தட்டை வட்டாட்சியர் திரு.ரெ.துரைராஜ், பெரம்பலூர் தனி வட்டாட்சியர் (ஆதிந) திரு.ப.சத்தியமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.