கடலூர் மாவட்டத்தில் 4 பெண்கள் உள்பட 6 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வருவதால் கிராமம், நகராட்சிக்கு உள்பட்ட சாலைகள் உள்ளிட்ட சில இடங்களில் மழைநீா் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளதால், கிராம, நகராட்சி சாா்பில் அதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டனா். அவா்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 4 பெண்கள் உள்பட 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
அதாவது, பண்ருட்டியில் 2 பேர், வண்டிப்பாளையம், மஞ்சக்குப்பம், நெய்வேலி, முட்டத்தில் தலா ஒருவர் என 6 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்கள் மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.