புதுடெல்லி:
 
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமான ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்டு அல்லது செப்டம்பர் வரை நடத்தப்படும். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு அந்த காலகட்டத்திற்குள் கூட்டத்தொடரை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடர் திட்டமிட்ட காலத்திற்கு 12 நாட்கள் முன்னதாகவே (மார்ச் 23) முடித்து வைக்கப்பட்டது.
 
இதற்கிடையில், இரு கூட்டத்தொடர்களுக்கு இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது என்பதால் மழைக்கால கூட்டத்தொடரை விரைவில் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. 
 
கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு தகுந்த முன்னேற்பாடுகளுடன் பாராளுமன்ற இரு அவைகளையும் நடத்த பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. 
 
சமுக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் உறுப்பினர்களின் இருக்கை வசதிகள் மாற்றியமைக்கப்பட்டன. மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
 
மேலும், பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் (நாளை முதல்) கூட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
இரு அவைகளும் நாளை முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டத்தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், நாளை தொடங்க உள்ள பாரளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்தும் பாரளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று ஆய்வு செய்தார். 
 
பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா,’பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை நடைபெற உள்ளது.  
 
இந்த நெருக்கடியான காலகட்டங்களிலும் சபை உறுப்பினர்கள் தங்கள் கடமைகளையும், பொறுப்புக்களையும் நிலைநிறுத்தவும், நிறைவேற்றவும் உறுதிபூண்டுள்ளனர்.
 
இந்த கடினமான காலங்களில், அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு பலனளிக்கும் விவாதங்களில் ஈடுபடுவார்கள் என நம்புகிறேன்’ என்றார்.
 
நீண்ட இடைவெளிக்கு பின் நாளை தொடங்க உள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் எல்லை விவகாரம், பொருளாதார வீழ்ச்சி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த கூட்டத்தொடரில் கேள்விநேரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here