புதுடில்லி:

‘டாக்டே’ புயலால், பலத்த காற்று வீசியதுடன், கன மழையும் பெய்ததால், கர்நாடகாவின் ஏழு மாவட்டங்களில், 73 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. நான்கு பேர் பலியாகினர். கேரளாவில் பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயலுக்கு, ‘டாக்டே’ என, பெயரிடப்பட்டுள்ளது.

புயலால், தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, கோவா மற்றும் குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில், பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.கர்நாடகாவின் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, குடகு, ஷிவமோகா, சிக்கமகளூரு மற்றும் ஹசன் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், 17 தாலுகாக்களில் உள்ள, 73 கிராமங்கள், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

வீடுகள் இடிந்தது உள்ளிட்ட சம்பவங்களால், உத்தர கன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு மற்றும் ஷிவமோகாவில், தலா ஒருவர் என, நான்கு பேர் உயிரிழந்தனர். மழை வெள்ள பகுதிகளில் இருந்து, இதுவரை, 318 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்; 298 பேர், 11 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், மின் கம்பங்கள், பல ஏக்கர் விவசாய நிலங்கள் சேதம் அடைந்துள்ளன.

கடற்கரை மாவட்டங்களில் கன மழையின் போது, 70 முதல், 90 கி.மீ., வரை பலத்த காற்று வீசியது. பாதிப்புக்குள்ளான மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்களுடன், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தொலைபேசி வாயிலாக பேசி, நிலைமையை கேட்டறிந்தார்.

கேரளாவின் எர்ணாகுளம், இடுக்கி மற்றும் மலப்புரம் மாவட்டங்களில், நேற்று கன மழை பெய்தது. மத்திய கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அணைகள், மழையால் நிரம்பியுள்ளன. பல அணைகள் திறக்கப்பட உள்ளதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி, மாவட்ட நிர்வாகங்கள் எச்சரித்துள்ளன.

எர்ணாகுளத்தில் உள்ள கடற்கரை கிராமமான செல்லானம், கடுமையாக பாதிக்கப்பட்டது. கடல் சீற்றத்தால், வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது; கடற்படை வீரர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.கடல் சீற்றம் காரணமாக, கேரளாவில் ஒன்பது மாவட்டங்களில், நுாற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. இதற்கிடையில், ‘அதிதீவிர புயலாக உருவாகிஉள்ள டாக்டே, அடுத்த, 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து, இன்று மாலை, குஜராத் கடல் பகுதியை அடைகிறது. நாளை அதிகாலை, குஜராத்தின் போர்பந்தர் – மஹூவா இடையே கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: டாக்டே புயல், குஜராத் கடல் பகுதியை அடையும் போது, அதிதீவிர புயலாக மாறி, மணிக்கு, 150 – 175 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். ஆமதாபாத், சூரத், ஆனந்த், பாவ்நகர் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில், கடல் சீற்றம் கடுமையாக இருக்கும்.

குடிசை வீடுகள் மற்றும் இதர குடியிருப்பு பகுதிகளில் சேதம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு கம்பங்கள் காற்றில் அடித்து செல்லவும், ரயில்வே தண்டவாளங்கள் சேதம் அடையவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், குஜராத்தில் கடலோர பகுதிகளில் வசித்த, 1.50 லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மஹாராஷ்டிராவிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையினர் களம் இறக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், மஹா ராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மற்றும் கோவா முதல்வர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொலைபேசி வாயிலாக பேசி, புயல் நிலவரங்களை கேட்டறிந்தார்.புயல் பாதிப்பு காரணமாக, மருத்துவமனைளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு, எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என, அவர்களிடம், அமித் ஷா அறிவுறுத்தினார்.

                      படகு கவிழ்ந்து இருவர் பலி!
மங்களூரு கடல் பகுதியில், நடுக்கடலில் சிக்கிய கப்பலை மீட்கும் பணியில், படகு ஒன்று நேற்று ஈடுபட்டு இருந்தது. அப்போது, பலத்த காற்று வீசியதில், மீட்பு படகு கவிழ்ந்தது. இதில், இருவர் பலியாகினார். ஐந்து பேரை காணவில்லை.இருளில் மூழ்கிய கோவா!டாக்டே புயல் காரணமாக, கோவாவில் நேற்று பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. நுாற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. மின்சார கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனால், கோவாவின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here