ரூ.72 லட்சம் தங்கம் பறிமுதல்: தொடர் விசாரணை!
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது ஒரு பயணி கழிவறைக்கு சென்றுவிட்டு நீண்டநேரமாக வெளியே வராததை அதிகாரிகள் கண்டனர். உடனே கழிவறைக்குள் சென்று பார்த்த போது, அங்கு அவர் மிகவும் பதற்றத்துடன் இருந்தார்.
அவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தபோது, அவர் வேலூரை சேர்ந்த அஜ்மல்கான் (வயது 26) என்பதும், துபாயில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்ததாகவும், அதை கழிவறையில் மறைத்து வைத்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், கழிவறையில் மறைத்து வைத்திருந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ எடைகொண்ட 2 தங்கக்கட்டிகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
அதேபோல் சென்னையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் பயணம் செய்ய வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ரகுமான் அமீது (25) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். பின்னர் அவரது உடைமைகளை சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் மற்றும் சவுதி ரியால் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்திச்செல்ல முயன்றதை கண்டனர்.
அவரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 பேரிடம் இருந்து ரூ.72 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கத்தையும், ரூ.7½ லட்சம் வெளிநாட்டு பணத்தையும் பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.