கள்ளக்குறிச்சி:
கனியாமூர் கலவரம் தொடர்பாக முதல்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ள 108 பேருக்கு ஆகஸ்ட் 12ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி இறந்ததை தொடர்ந்து கடந்த 17ம் தேதி பள்ளிக்கு எதிரில் போராட்டம் நடந்தது. அப்போது கலவரக்காரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை கற்களால் தாக்கி அத்துமீறி பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த பஸ், கார், டிராக்டர், பைக் உள்ளிட்ட பல வாகனங்களுக்கும் சான்றிதழ்களுக்கும் தீ வைத்தனர்.
வகுப்பறையில் இருந்த தளவாட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். நான்கு மணி நேரத்திற்கு மேலாக நடந்த கலவரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கலவரம் தொடர்பாக முதல்கட்டமாக 108 பேரை போலீசார் கைது செய்து கடந்த 18ம் தேதி கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அனைவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவர் முகமது அலி உத்தரவிட்டார்.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 108 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், 108 பேரும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது அலி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 108 பேருக்கும் வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.