கடலூர் மாவட்டம் சோழ நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் சுப்புலட்சுமி (வயது 21). இவர் தாதன்குட்டை தெருவை சேர்ந்த கொளஞ்சி மகன் மணிகண்டன் (23) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு சுப்புலட்சுமியின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில் சுப்புலட்சுமி கர்ப்பமடைந்தார். 6 மாத கர்ப்பிணியாக இருந்த போது, தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 20-ந்தேதி மணிகண்டனை அவர் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் தனது கணவர் வீட்டில் சுப்புலட்சுமி இருந்து வந்தார். இந்த நிலையில் மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாதது பற்றி அறிந்த சுப்புலட்சுமியின் தாய் கஸ்தூரி அங்கு சென்று, சுப்புலட்சுமியை தனது வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்துள்ளார்.
தாய் வீட்டிற்கு சென்ற சுப்புலட்சுமிக்கு சத்து மாத்திரை எனக்கூறி அவரது தாய் கஸ்தூரி மாத்திரை கொடுத்துள்ளார். தாய் மீது உள்ள நம்பிக்கையின் பேரில், அதை சுப்புலட்சுமியும் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
சிறிது நேரத்தில் அவர் வயிற்று வலியால் துடி துடித்துள்ளார். இதுபற்றி அறிந்த அவரது கணவர் மணிகண்டன் சுப்புலட்சுமியை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு மீண்டும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு, இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சுப்புலட்சுமிக்கு அதன் பின்னர் தான் தனது தாய் தந்தது கருகலைப்புக்கான மாத்திரை என்பது தெரியவந்தது. பெற்ற தாயே தனக்கு செய்த கொடூர செயலை எண்ணி அவர் கதறி அழுதார். இதுபற்றி அவர் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஸ்தூரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.