இராணிப்பேட்டை:
இராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டா வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இராணிப்பேட்டை மாவட்டம் செங்கணாபுரத்தை சேர்ந்த ராஜசேகர் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.
வாலாஜாபேட்டையில் உள்ள தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் ராஜசேகர் பணியாற்றி வந்தார். அப்போது பட்டா மற்றும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பல்வேறு நபர்களிடமிருந்து பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்போதைய வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமனுடைய கையெழுத்தை ராஜசேகர் போலியாக போட்டு, பட்டா வழங்கியுள்ளார். இந்த நிலையில், பட்டா வாங்கியவர்கள் நிலத்தை பார்க்க சென்றபோது, தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதனை அறிந்த ராஜசேகர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜேந்திரன் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட இராணிப்பேட்டை போலீசார் தலைமறைவாக இருந்த வருவாய் ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ராஜேந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து, விசாரணையில், 35க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமானது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.