திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கஞ்சா, கள்ளச்சாராயம், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை கண்டறிய தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அவ்வழியாக சந்தேகத்தின் அடிப்படையில் வந்த காரினை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் 98 பாக்கெட்டுகள் கொண்ட ஹான்ஸ், குட்கா மற்றும் பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அந்த காரில் பயணம் செய்த கணவன், மனைவி ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெங்களூரில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்த கணவன் மனைவி ஆகிய இருவரும், திருவண்ணாமலை அடுத்த சோமசிப்பாடி கிராமத்தை சேர்ந்த ஜான்பாஷா என்பதும் அவரது மனைவி ஹஜீரா என்பதும் தெரியவந்தது, மேலும் மங்கலம் காவல் நிலைய போலீசார் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தி வந்த கணவன் – மனைவி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.