திருபுவனை காவல்நிலைய போலீசார் திருபுவனை, நெட்டப்பாக்கம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை மற்றும் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள ஒரு வீட்டை போலீசார் சுற்றி வளைத்த போலிசார், அங்கிருந்தவர்களை பிடித்து விசாரித்ததில், வாடகைக்கு வீடு எடுத்து அந்த கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த திடுக்கிடும் தகவல் வெளியானது. இதையடுத்து வீட்டில் சோதனை செய்ததில், அரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் சிக்கின. மேலும் கஞ்சாவை பாக்கெட் போட்டுக் கொண்டிருந்த 5 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
இதில், ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் காரைக்காலை சேர்ந்த மாணவர்களான ராஜேஷ் (வயது 22), வீரகலைமணி (23) மற்றும் திருபுவனையை சேர்ந்த தாமோதரன் (22), விக்னேஷ்குமார் (26), எழிலன் (19) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில் திருபுவனை பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதே போல் இவர்களின் கூட்டாளிகளான மோட்டார் சைக்கிளில் சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆகாஷ் (22), அரியூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (23), காமேஷ்(19) ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு கஞ்சா தேவைப்படுவதுபோல் பேசி வரவழைத்து அவர்களை போலிசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 125 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கஞ்சா பொட்டலங்களை பல்வேறு இடங்களில் விற்பனை செய்ய பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள்கள், 8 செல்போன்கள், 750 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினார்கள். கைதான கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.