இந்தியாவில் கொலைவெறி கொரோனாவின் மிரட்டல் ஆட்டம் 2020 பிப்.,ல் துவங்கியது. முதல் அலை சரியாக ஓராண்டு நீடித்தது. கொடூர தாக்குதல், கொத்து கொத்தாக மரணங்கள் என செப்டம்பரில் உச்சம் தொட்டது.

பாதுகாப்பான நிலையை இந்தியா அடைந்தது. ‘கொரோனா தொல்ல ஒரு வழியாக ஒழிஞ்சுது’ என புத்தாண்டில் மக்கள் முழு நம்பிக்கை அடைந்தனர். சகஜ நிலைக்கு திரும்பினர். பிப்., 2ம் வாரம் முடிந்தது தான் தாமதம் 2ம் அலை துவங்கியுள்ளது.

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் மாநிலங்களில் மீண்டும் கொரோனா பந்தாடத் துவங்கியது. பின்னர் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா… என 4 திசை மாநிலங்களிலும் 2ம் அலையின் தாக்கம் தென்பட துவங்கியது. இப்போது நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் எகிறிக்கொண்டு இருக்கிறது. நேற்று முன்தினம் பாதிப்பு மட்டும் 68,020 என்றால் பாருங்களேன். இதற்கு முன்பு கடந்த ஆக.,- அக்., மாதங்களில் தான் பாதிப்பு எண்ணிக்கை இதேயளவு அல்லது இதற்கு மேல் இருந்தது.

இந்த தாண்டவத்தின் இடையே சட்டசபை தேர்தல் வேறு நடக்கிறது. தேர்தல் பிரசாரங்களில் மாஸ்க், சமூக இடைவெளிக்கு இடமில்லை. இதன் விளைவுகளையும் நாம் தான் அறுவடை செய்தாக வேண்டும். தேர்தல் முடிவுக்கு பிறகு தான் இதன் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பது தெரியும் என மருத்துவ நிபுணர்கள் இப்போதே கலக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.

குலை நடுங்கும் நாடுகள்

இதற்கிடையே மரபணு மாறிய பிரிட்டன், பிரேசில், தென்ஆப்பிரிக்க கொரோனா வைரஸ்கள் பல மாநிலங்களில் தென்படுகின்றன. இவை அசுர வேகத்தில் தாக்குதல் தொடுக்க கூடியவை. இரட்டை மரபணு மாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் ஒன்றும் உலா வருகிறது.

இது வேறு எங்கும் பிறக்கவில்லை. நம் இந்திய திருநாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் உதித்தது. இதுவரை பிரிட்டன், பிரேசில், தென்ஆப்பிரிக்கா நாடுகளை கண்டு இந்தியா அஞ்சியது. இப்போது இந்தியாவை கண்டே மற்ற நாடுகள் குலைநடுங்கிப் போய் இருக்கின்றன. ஏனென்றால் தற்போது இருக்கும் மரபணு மாறிய வைரஸ்களிலேயே மிகக்கொடியது இந்தியாவின் புதிய கொரோனா வைரஸ் தானாம். மகாராஷ்டிரா மாநிலத்தில் 20 சதவீத பாதிப்புக்கு இவ்வைரஸே காரணம்.

2ம் அலை எப்படி இருக்கும்

பொதுத்துறை வங்கி ஒன்று நடத்திய ஆய்வு முடிவு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதன் அடிப்படையில் 2 ம் அலை எப்படி இருக்கும்…?
* இந்தியாவில் 2வது கொரோனா அலை பிப்.,15ல் துவங்கியதாக கருத வேண்டும். இந்த அலை 100 நாட்கள் வரை நீடிக்கலாம். குறிப்பாக, ஏப்., பிற்பாதியில் உச்சம் தொடும். அதன் பிறகு படிப்படியாக குறையும்.

* இந்த அலையில் 25 லட்சம் பேர் தாக்கப்படலாம். பாதிப்பை கட்டுப்படுத்த கொண்டு வரப்படும் ‘உள்ளூர் ஊரடங்கு’ பயனற்றுப்போகும். தடுப்பூசி போட்டுக்கொள்வது ஒன்றே இதற்கு தீர்வாக அமையும்.

* தற்போது தினசரி 34 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதை 40-45 லட்சமாக உயர்த்த வேண்டும்.

* இந்த ஆய்வு அடிப்படையில் பார்த்தால், அரசும் மக்களும் சரியாக செயல்படும் பட்சத்தில் 2ம் அலையால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றே தெரிகிறது. அதே வேளையில் மரபணு மாறிய புதிய வைரஸ்களின் மிரட்டல் ஆட்டம், மந்தகதியில் நடக்கும் தடுப்பூசி பணி, மாஸ்க், சமூக இடைவெளியில் மக்கள் காட்டும் அலட்சியம் இந்த ஆய்வு முடிவை மாற்றி அமைக்கலாம் என்பதும் மறுப்பதற்கில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here