சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமை வகித்தார். துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டமானது காலை 9.57 மணி முதல் மதியம் 1.19 மணி வரை நடைபெற்றது. மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்திற்கு பின்னர் முதல் முறையாக நேற்றைய மன்ற கூட்டத்தில் நேரமில்லா நேரம் வழங்கப்பட்டது. மன்ற கூட்டத்தில் 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவற்றில் முக்கியமான சில தீர்மானங்கள் வருமாறு:-

* சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக கற்றல், கற்பித்தல் பணிகளை நிறைவு செய்திட தற்காலிகமாக 168 இடைநிலை ஆசிரியர்கள், 138 பட்டதாரி ஆசிரியர்கள், மற்றும் 147 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் 2023-ம் ஆண்டு மார்ச் வரை தற்காலிகமாக நியமித்து கொள்ளலாம் என்றும், அதற்கு தேவையான நிதியினை பள்ளி மேலாண்மை குழு மூலம் கல்வி அலுவலர் வாயிலாக பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

* சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அலுவலகம், நிர்வாகம் போன்ற பள்ளிசார் பணிகளை மேம்படுத்த, கணினி உதவியாளர்கள் பணியிடங்களை 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் தற்காலிகமாக நியமித்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

* தியாகராய நகர் பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கு முக்கிய காரணியாக இருக்கும் மாம்பலம் கால்வாயை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி அழகுப்படுத்தி உருவாக்கி இருந்தது. இப்போது இந்த திட்டமே மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* சென்னை மாநகரில் 4 இடங்களில் காற்றின் தரத்தை கண்காணிக்கும் மையங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமும், சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு மையமும் அமைக்க ரூ.7 கோடியே 8 லட்சத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

மாநகராட்சி கூட்டம் தொடங்கியதும், அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் கே.பி.கே.சதீஸ்குமார் தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தமிழக அரசு சொத்து வரி, மின்சார கட்டணத்தை உயர்த்தியதாக கூறி கண்டித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், அவர்கள் ரிப்பன் மாளிகை வளாகத்திலேயே சொத்துவரி மற்றும் மின்சார கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பதாகைகளை ஏந்தியபடி கோஷம் எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here