திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்கள் 31 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,384 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் முககவசம் அணிவதுடன், கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி வாஷிங்டன் நகரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளி ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சுகாதாரத்துறை சார்பில் அந்நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல் நாள் 15 பேருக்கும், 2-ம்நாள் பரிசோதனையில் 16 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
இதனிடையே வாஷிங்டன் நகரில் வசித்து வரும் 2 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.