பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின் படி அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தில் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. தினசரி தற்போது 2 நாட்களாக 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட 1900 மினி கிளினிக்குகள், தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என 4328 மையங்கள் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இதில் 3797 மையங்களில் கோவிட் ஷீல்டு தடுப்பூசியும்,  கோவேக்சின் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இதே எண்ணிக்கையில் தான் இனியும் மையங்கள் செயல்படும்.

ஜனவரி 16 ஆம் தேதி 600 மையங்களில் தொடங்கப்பட்ட இத்தடுப்பூசி போடும் பணி தற்போது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு 4328 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் படி ஜனவரி 16 ஆம் தேதி முதல் தற்போது வரையிலான 76 நாட்களில் 1 கோடியே 39 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் தற்போது வரை 6,78,532 சுகாதாரப்பணியாளர்கள், 6,56,393 முன் களப்பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 12,49,979 பேர், 45 முதல் 60 வயதுக்குட்பட்டோரில் 11,47,961 பேர் என மொத்தம் 37,32,865 பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இன்னும் மக்கள் மத்தியில் வேகமாக கொண்டு செல்லும் முயற்சியாகவே 4 நாட்கள் கோவிட் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது.

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பின் படி , தகுதியான அனைவருக்கும் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்த வைப்பதே இத்திருவிழாவின் நோக்கமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here