இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு சற்று குறைவாக பதிவாகி இருந்தது.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக 4,12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 ஆக உயர்வடைந்து உள்ளது.
கொரோனா பாதிப்பால் நாட்டில் நேற்று 3,980 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,30,168 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 113 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 72 லட்சத்து 80 ஆயிரத்து 844 ஆக உயர்வடைந்து உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 35,66,398 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 16 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரத்து 339 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 29 கோடியே 67 லட்சத்து 75 ஆயிரத்து 209 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 19,23,131 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.