வதந்திகளைப் பரப்ப வேண்டாம்- டாக்டர் பல்ராம் பார்கவா
ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டால் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று சில தரப்புகளில் இருந்து அச்சம் தெரிவிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியை போட சில ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்ததும் சுட்டிக்காட்டப்பட்டது.
இ்ந்நிலையில், கோவிஷீல்டு குறித்து அச்சப்படுவதற்கு இதுவரை எந்த அறிகுறியும் எழவில்லை. அந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்பதால், அதை போடுவதை தொடர வேண்டும். சில நாடுகளில் சந்தேகப்பட்டது போல், கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறையும் ஆபத்து எதுவும் இல்லை என்று நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா கூறுகையில், ‘கோவிஷீல்டு, கோவேக்சின் இரண்டுமே இங்கிலாந்து, பிரேசில் வகை கொரானா வைரஸ்களுக்கு எதிராக பலனளிக்கக் கூடியவை. தென்ஆப்பிரிக்க கொரோனா வகைக்கு எதிரான அவற்றின் திறன் ஆராயப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிகள் குறித்த வதந்திகளைப் பரப்ப வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.