கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க அனுமதி!

தமிழக சட்டசபை தேர்தல் அட்டவணையில் மாற்றமில்லை என்றும், திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும் எனவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ரூ.83.99 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.70 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 6.29 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 3.09 கோடி பேரும், பெண்கள் 3.19 கோடி பேரும் உள்ளனர். 7,192 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.

80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தமிழகத்தில் மொத்தம் 12.87 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 1,49,567 பேர் தபால் முறையில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்தலில் போட்டியிட மொத்தம் 7,255 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அதில் 4,512 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன; 2,743 நிராகரிக்கப்பட்டுள்ளன. போட்டியிடும் வேட்பாளர்களில் மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் உள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை; தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும். கொரோனா அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். கொரோனா பாதித்த வேட்பாளர்கள் கவச உடையுடன் வாக்களிக்கலாம். கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here