நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஏ.சி இல்லாமல் இருக்க முடியவில்லை என்ற நிலை வந்துவிட்டது. குளிரில் இருந்து வெப்ப காலத்துக்கு நம்முடைய உடலும் மாறிவிட்டது. இந்த கொளுத்தும் வெயிலை சமாளிக்க மக்கள் தர்பூசணி, கிருணிப் பழ ஜூஸ் என்று படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். கோடையில் உடலுக்கு நலம் தரும் உணவுகள் பற்றி இங்கே காண்போம்.
மோர்
கோடைக் காலம் என்றாலே பலரும் தயிரை எடுத்துக்கொண்டால் குளிர்ச்சி தரும் என்பதுதான். தயிர் குளிர்ச்சியான உணவு இல்லை. உணவு செரிமானத்தில் மந்தத்தை ஏற்படுத்தி, உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்துவிடும். தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் மோர் உடலுக்கு குளிர்ச்சி. கோடையில் மோரை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் தயிர் சாதமாக எடுத்துக்கொள்வதில் பிரச்னை ஒன்றும் இல்லை என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
புதினா
புதினா உடலுக்கு குளிர்ச்சி தரும். புதினா டீ, புதினா துவையல், சட்னி என ஏதாவது ஒரு வகையில் புதினாவை எடுத்துக்கொள்ளலாம். புதினா உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன், செரிமானத்துக்கு துணை புரிகிறது, ஆஸ்துமா அலர்ஜியைத் தடுக்கிறது, சில வகையான தலைவலியைப் போக்குகிறது, வாய், பற்களின் ஆரோக்கியத்தைக் காக்கிறது.
வெள்ளரி
நீர் நிறைந்த குளிர்ச்சியான காய்கறி வெள்ளரி. கோடைக் காலத்தில் உடலுக்கு நீர்ச்சத்தை வழங்கும் சிறந்த காய்கறி. குறைந்த கலோரி கொண்ட வெள்ளரியை கோடையில் எடுத்துக்கொள்வதன் மூலம் உடலின் தண்ணீர் சத்து பாதுகாக்கப்படும். உடல் எடையும் குறையும்.
எலுமிச்சை ஜூஸ்
கோடையில் பலரும் விரும்புவது சில் என்ற எலுமிச்சை ஜூஸ்தான். வெயிலில் கலைத்து வருபவர்களுக்கு எலுமிச்சை ஜூஸில் உள்ள சர்க்கரை சத்து உடனடி ஆற்றல் அளிக்கும். எலுமிச்சை புத்துணர்வு அளிக்கிறது. உடலை குளிர்விப்பதுடன், செரிமானத்தையும் மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது எலுமிச்சை ஜூஸ். உச்சி வெயிலில் அலைந்துவிட்டு அதிக சில் என்று ஜூஸ் அருந்த வேண்டாம். அது வேறு விதமான பாதிப்பை ஏற்படுத்திவிடும். மிதமான குளிர்ச்சி கொண்ட ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம்.
தர்பூசணி
ஆண்டு முழுவதும் தற்போது இறக்குமதி செய்யப்பட்ட தர்பூசணி கிடைக்கிறது என்றாலும் கோடையில் கிடைக்கும் சுவையான நம் ஊர் தர்பூசணிக்காக பலரும் காத்திருப்பது வழக்கம். தர்பூசணி, முலாம்பழம், கிர்ணி பழம் என்று கோடையில் கிடைக்கும் பழங்கள் நம்முடைய உடலுக்கு நீர்ச்சத்தையும் ஊட்டச்சத்தையும் வழங்குகின்றன. உடலை, வயிற்றை குளிர்ச்சியடைய செய்து, செரிமானத்தை மேம்படுத்த இவை உதவுகின்றன.