சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஹாசீர் என்கிற முகம்மது ஹாசீர். இவர் விருகம்பாக்கம் கோதாவரி தெருவில் “ரூபி பிலிம்ஸ்” என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார். “வண்டி”, “கன்னிமாடம்”, “மங்கி டாங்கி” உள்ளிட்ட பல திரைப்படங்களை இந்நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் கௌசிக் ராமலிங்கம் என்பவர் இயக்கத்தில் நடிகர்கள் யோகி பாபு, GV பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் “ஜாக் டேனியல்” என்ற திரைப்படத்தை ஹாசீர் தயாரித்துள்ளார். இந்த நிலையில் நடிப்பதற்கு தன்னிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அதன் பிறகு நடிக்க வராமலும் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றி வருவதாக நடிகர் யோகி பாபு மீது தயாரிப்பாளர் ஹசீர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் யோகி பாபு ரூ. 65 லட்சம் ஒப்பந்தம் செய்து அட்வான்ஸ் தொகையாக ரூ. 20 லட்சம் கொடுத்ததாகவும், குறிப்பாக ரூ. 5 லட்சம் பணமாகவும், 15 லட்சம் காசோலையாகவும் கொடுத்ததாகவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திரைப்பட ஷூட்டிங் தொடங்கியதும் நடிகர் யோகி பாபுவை நடிப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் அழைத்ததாகவும், ஆனால் யோகி பாபு வராமல் ஏமாற்றி வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதனால் பணத்தை திருப்பி தரும்படி கேட்டபோது பணத்தை தராமல் இழுத்தடித்து வந்ததாகவும் இதனால் தனது பணத்தை மீட்டுத் தரும்படியும் தயாரிப்பாளர் ஹாசீர் புகாரில் தெரிவித்து இருந்தார்.
நடிகர் யோகி பாபு:
“ஜாக் டேனியல்” திரைப்படத்தின் இயக்குனர் கௌசிக் ராமலிங்கம் இந்த புகார் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், “முதற்கட்ட படப்பிடிப்பு நடத்தி முடித்த பிறகு தயாரிப்பாளர் ஹாசிர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்தாமல் பணமில்லை என காலம் தாழ்த்தி வந்ததாகவும், ஒரு கட்டத்தில் ஜாக் டேனியல் படத்தை கைவிட்ட ஹாசிர் தன்னிடம் பணம் இல்லாத காரணத்தினால் திரைப்படம் கைவிடப்படுகிறது எனக்கூறி NOC சான்றிதழ் அளித்ததாகவும் கௌஷிக் ராமலிங்கம் தெரிவித்தார்.
மேலும், நடிகை ஷீலா ராஜ்குமாரை வைத்து “பட்டாம்பூச்சியின் கல்லறை” என்ற படத்தை இயக்கி வருவதால் ஜாக் டேனியல் திரைப்படம் கைவிடுவது தொடர்பாக சுமுகமாக பேசிக் கொள்ளலாம் என ஹாசிர் தெரிவித்ததாக திரைப்படத்தின் இயக்குனர் கௌசிக் ராமலிங்கம் தெரிவித்தார்.
மேலும், இந்த படத்தின் கதாநாயகன் ஜிவி பிரகாஷிடம் இருந்து ஒரு தொகை வாங்கிவிட்ட காரணத்தினால் யோகி பாபுவிடம் இருந்தும் ஏதாவது பணம் பெறலாம் என தயாரிப்பாளர் நினைத்துள்ளார். இதன் காரணமாக கூட இந்த புகார் அவர் கொடுத்திருக்க வாய்ப்பு இருக்கிறது என தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சட்ட ரீதியாகவும் இந்த பிரச்சினையை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.