பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15.02.2023 அன்று ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்)  மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின்  உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் சிறப்பு விற்பனை கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்கான  திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்களின் வறுமை ஒழிய, வாழ்வாதாரம் பெருக, கல்வி வளர்ச்சி பெற பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் திட்டம், அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் “புதுமைப் பெண் திட்டம்”, மேல்நிலைப் பள்ளி பயிலும்போதே உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என்பதை மாணவர்களுக்கு விளக்கி அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையிலான “நான் முதல்வன் திட்டம்” என சொல்லிக்கொண்டே போகலாம்.

கிராமப்புற பெண்கள் சுயமாக தொழில் செய்து சுயமரியாதையுடன் வாழ வழி செய்திடும் வகையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில் தொடங்க கடனுதவிகள் அரசால் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் எண்ணற்ற பெண்கள் தொழில் முனைவோர்களாக சாதித்துள்ளனர்.

அந்த வகையில் சுய உதவி குழு பெண்களின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இங்கே கல்லூரி சந்தையின் வாயிலாக உங்களுக்கு காட்சிப்படுத்தி சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களின், உற்பத்திப் பொருட்கள் விற்பனையினை ஊக்கப்படுத்திட கல்லூரிகளில் விற்பனை மற்றும் கண்காட்சி  தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகின்றது.  

இங்கு பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 55-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது உற்பத்தி  பொருட்களான மரச்சிற்பம், சணல் பொருட்கள், சிறுதானிய உணவுகள், அலங்காரப் பொருட்கள், பாசிமணி, படிகமணி, மூலிகை சோப்பு, போன்ற கைவினைப்பொருட்கள் மற்றும் ஆடைகள் ஆகியவை விற்பனைக்கு வைத்துள்ளார்கள். இக்கண்காட்சி 14.02.2023 அன்று தொடங்கி 15.02.2023 மற்றும் 16.02.2023 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.கருப்பசாமி, தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் திரு.வரதராஜன்,கல்லூரி முதல்வர். டாக்டர்.ம.ஜெயந்தி, உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here