கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் நேற்று முன் தினம் அதிகாலை 4 மணிக்கு, காரின் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த நபர் உயிரிழந்த நிலையில், விசாரணைக்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கார் வெடிவிபத்தில் இறந்தவர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவர் பழைய துணி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. ஏற்கனவே அவரிடம் 2019ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியதும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. ஜமேசா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நாட்டு வெடிகுண்டு செய்வதற்கான மூலப் பொருட்கள் அவர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக கோவை உக்கடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஜமேஷா முபீன் வீட்டில் வெடிபொருட்கள் கைபற்றபட்டது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷா வின் தம்பி நவாப் கானின் மகன் முகமது தல்கா. கார் கொடுத்த விவகாரத்தில் முகமது தல்கா கைது செய்யப்பட்டுள்ளார். நவாப் கான் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டணை கைதியாக சிறையில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.