திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் வட்டம், சீவல்சரகு ஆத்துப்பட்டி பிரிவில், ஆத்துார் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு ரூ.75.75 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், தலைமையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் .இ.பெரியசாமி அவர்கள் கலந்துகொண்டு புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கோ.க.மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் அந்த திட்டங்களின் பயன்கள் அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில், செயல்பட்டு வருகிறார்கள். கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் கிராமப்பகுதிகளில் புதிதாக அரசுக் கல்லுாரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசுக் கல்லுாரிகளில் கட்டணமும் மிகவும் குறைவுதான். திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி மேம்பாட்டுக்காக புதிய கல்லுாரிகள் தொடங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் ஓராண்டில் உயர்கல்வி மேம்பாட்டிற்காக 4 கல்லுாரிகள், பழனியில் ஒரு சித்தா கல்லுாரி, கொடைக்கானலில் ஒரு கூட்டுறவு பயிற்சி மையம் என 6 கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதி பெறப்பட்டு, கல்லுாரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீவல்சரகு ஊராட்சிக்குட்பட்ட சுதநாயகிபுரத்தில், கூட்டுறவுத்துறை சார்பில் ஆத்துார் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதேபோல், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரத்தில் உயர்கல்வித்துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கும் விரைவில் புதிய கட்டடம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும். கிராமப்பகுதிகள் சூழ்ந்த இந்த பிற்பட்ட பகுதியில் தற்போது அரசு கல்லுாரிகள் தொடங்கப்பட்டிருப்பது, இந்தப் பகுதி மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெற சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. ஏழை, எளிய மக்கள், விவசாயிகளின் குழந்தைகள் உயர்கல்வி பெற வேண்டும், நிதி பற்றாக்குறையால் அவர்களின் கல்லுாரி கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதே இந்த அரசின் லட்சியம். தேவைக்கேற்ப இன்னும் பல கல்லுாரிகள் தொடங்கப்படும். ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் விரைவில் 100 படுக்கைகளுடன் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக கூட்டுறவுத்துறையில் ஒரு பொற்காலத்தை ஏற்படுத்தியுள்ளார். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் கூட்டுறவு வங்கிகள் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கூட்டுறவுத்துறையில் யூரியா, டிஏபி, பொட்டாஷ் போன்ற உரங்கள் போதியளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கூட்டுறவு கடன் அதிகளவில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரூ.10,000 கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.8,300 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 3 மாத காலத்திற்குள் கடந்த ஆண்டைவிட கூடுதலாக கடனுதவிகள் வழங்கப்படும். கூட்டுறவுத்துறையில் 6,500 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. வெளிப்படைத்தன்மையுடன் பணி நியமனம் நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும். தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் உறுதுணையாக இருப்பேன் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசினார்.

இவ்விழாவில், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சு.ராமகிருஷ்ணன், திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் .கோ.காந்திநாதன், மாவட்ட ஊராட்சித்தலைவர் .மு.பாஸ்கரன், ஆத்துார் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் வெங்கடாசலம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மேலாண்மை இயக்குநர் ம.செல்வகுமார், ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்தலைவர் மு.மகேஸ்வரி முருகேசன், ஆத்துார் கூட்டுறவு சார் பதிவாளர் .கு.அன்பரசு, பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் மாதவன், செயற்பொறியாளர் .தங்கவேல், உதவி செயற்பொறியாளர் பாலு, உதவிப்பொறியாளர் வினோதன், சீவல்சரகு ஊராட்சித் தலைவர் ராணி ராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here