”தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்க, சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படும்,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

பா.ம.க., சட்டசபை தலைவர் ஜி.கே.மணி:
 தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை முற்றிலும் தடை செய்யப்படுமா?

முதல்வர் ஸ்டாலின்: அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து, போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை விற்போர், கடத்துவோர் மீது 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11 ஆயிரத்து 247 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 149.43 டன் குட்கா, 113 நான்கு சக்கர வாகனங்கள், 106 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குண்டர் சட்டத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்றது மற்றும் கடத்தல் தொடர்பாக 2,458 வழக்குகள், போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்டு, 5,793 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 3,413 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்; 81 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.போதைப் பொருட்கள் விற்போர் மற்றும் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, போதைப் பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்.

ஜி.கே.மணி: போதைப் பொருட்கள் உற்பத்தி, கடத்தல், விற்பனை செய்வது மாபெரும் குற்றம். தடுப்பு நடவடிக்கை எடுத்தாலும், பள்ளிகள், கல்லுாரிகள், மாணவ – மாணவியர் விடுதி முன் விற்கப்படுகின்றன.சென்னை மெரினா கடற்கரையில், வறுமையில் வாடும் இளைஞர்கள் வாயிலாக விற்கின்றனர். போதைப் பொருட்கள் வட மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படுகின்றன. இதை மாணவ – மாணவியர், உற்சாகத்தை கொடுப்பதற்காக வாங்கி பயன்படுத்தி, நாளடைவில் அடிமையாகி விடுகின்றனர்.இது, சமுதாயத்தை சீரழிக்கிற நிகழ்வாகிறது.

தடை நடவடிக்கை என்பது சமுதாயத்தை பாதுகாக்கிற நடவடிக்கை. சட்டத்தில் மேலும் திருத்தம் கொண்டு வந்து முற்றிலும் ஒழிக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?

முதல்வர்:
ஏற்கனவே போதை மற்றும் மன மயக்கப் பொருட்கள் தடை சட்டம் 1985ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு அருகில் போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்க, அந்த சட்டத்திலே புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படும்.

ஜி.கே.மணி
: திருத்தம் கொண்டு வருவதுடன், போதை தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஊக்கத் தொகை, சிறப்பு பரிசு வழங்க அரசு முன் வருமா?

முதல்வர்: காவல் துறையினரை ஊக்குவிக்க, அரசு நிச்சயம் தயங்காது. எனவே, எந்த வகையில் அவர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டுமோ அதை பரிசீலித்து, அவர்களுக்குரிய ‘ரிவார்டு’ நிச்சயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

10 ஆண்டுகளுக்கு பின் முதல்வர் துறையில் கேள்வி

தமிழக சட்டசபையின் கேள்வி நேரத்தில், எம்.எல்.ஏ.,க்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பர். அப்போது சபையில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் துணை கேள்வி கேட்க, சபாநாயகர் அனுமதி அளிப்பார். அதற்கும் அமைச்சர்கள் பதில் அளிப்பர்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வர் கவனித்த துறைகளில் கேள்வி இடம் பெறாமல் இருந்து வந்தது.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், கொரோனாவால் எம்.எல்.ஏ.,க்கள் கேள்விகளுக்கு பதில் பெற முடியவில்லை எனக் கூறி, சட்டசபை கூட்டத்தில் கேள்வி நேரம் இடம்பெறாமல் இருந்தது.

கடந்த 13ம் தேதி சட்டசபை கூட்டத் தொடர் துவங்கிய நிலையில், நேற்று கேள்வி நேரத்தில் ஐந்து வினாக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. முதல் கேள்வியாக, பா.ம.க., சட்டசபை தலைவர் ஜி.கே.மணி எழுப்பிய, தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படுமா என்ற கேள்வி இடம் பெற்றது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கு பின், முதல்வர் துறையில் கேள்வி இடம் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here