சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்த 17 ஊழியர்களுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அந்த துணிக்கடையை மூடும்படி மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆனால் சில தினங்களில் கடையின் பின்பக்க வாசல் வழியாக வாடிக்கையாளரை கடைக்குள் அனுமதித்து, துணி வியாபாரம் செய்து வந்தனர். இதனால் கடையில் கூட்டம் அலை மோதியதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீசார், துணிக்கடை நிர்வாகிகளிடம் கடையில் வியாபாரம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினர். அதன்பிறகு வியாபாரம் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் மீண்டும் கடையின் பின்பக்க வாசல் வழியாக துணிக்கடையில் வியாபாரம் நடப்பதாகவும், அதிகளவில் வாடிக்கையாளர்கள் சென்று வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராயபுரம் மண்டல உதவி வருவாய் அலுவலர் பாலசந்தர் தலைமையிலான அதிகாரிகள், அங்கு சென்று கடைக்குள் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை வெளியேற்றினர். பின்னர் பின்பக்க வாசல் கதவை பூட்டிய அதிகாரிகள், துணிக்கடைக்கு ‘சீல்’ வைத்தனர்.