திரைப்படத் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜா அலுவலங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தியாகராயர் நகரில் உள்ள தாணு அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தயாரிப்பாளர் அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடக்கும் நிலையில் தாணு அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்குச் சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம், அவரது வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்பு, விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்பட விவகாரத்தில், ஏற்கனவே 2020ஆம் ஆண்டு அன்புச் செழியன் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.