சின்ன திரை நடிகை தற்கொலை: தொடர் விசாரணை!  

66
சின்ன திரை நடிகை தற்கொலை: தொடர் விசாரணை!  
 
பூந்தமல்லி:
 
பிரபல டி.வி. நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி தனியார் ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பிரேத பரிசோதனையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார் என்பது தெரிய வந்தது.
 
இதைத்தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை போலீசார் கடந்த 3 நாள்களாக விசாரணை நடத்தி வந்தனர்.
 
இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் சில மாறுபட்ட தகவல்களை தெரிவித்துள்ள நிலையில், அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு தொடர்ந்து ஆஜராகுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
 
இந்த நிலையில் சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் சித்ராவின் தாயாருக்கு ஹேம்நாத்தை பிடிக்கவில்லை என்றும், இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் இவர்களின் திருமணத்திற்காக அவர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாகவே இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.
 
மேலும், சம்பவம் நடந்த அன்று படப்பிடிப்புத்தளத்தில் இருந்து ஓட்டல் அறைக்கு வந்த சித்ரா, ஹேம்நாத்தை வெளியே அனுப்பி விட்டு உடையை மாற்றி விட்டு நீண்ட நேரம் அவரது தாயாருடன் செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
 
இதன் காரணமாகவே சித்ரா தற்கொலைக்கு முன்பு நைட்டி ஆடையுடன் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது தாயாருடன் பேசும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருபுறம் கணவரை விட்டுப் பிரிய முடியாமலும், தாயின் பேச்சை தட்ட மனமில்லாமலும் உண்டான மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here