சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ஆல்வின் ஞானதுரை. இவர் தனியார் வங்கி ஒன்றில் முகவராக வேலை பார்த்து வந்தார். இவர் தான் வேலைபார்க்கும் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யும்படி பொதுமக்களிடம் சென்று பேசி பணத்தை வாங்குவார். அவ்வாறு வாங்கும் பணத்தை வங்கியில் செலுத்துவார். அதற்கு அவருக்கு கமிஷன் தொகை கிடைக்கும். இவ்வாறு பொதுமக்கள் 70 பேரிடம் ரூ.90 லட்சம் வசூல் செய்தார். அந்த பணத்தை வங்கியில் செலுத்த ஏற்பாடு செய்தார்.
அப்போது சென்னை அய்யப்பன் தாங்கலைச் சேர்ந்த மதபோதகர் பாலன், தூத்துக்குடியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன இடைத்தரகர் வேலாயுதம், ஆகியோர் ஆல்வின் ஞானதுரையிடம் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் தங்களுக்கு தெரிந்த நவாஷ் என்பவரிடம் ரூ.90 லட்சத்தையும் கொடுத்தால், அதற்கு அதிக வட்டியும் கிடைக்கும், அதிக கமிஷன் தொகையும் பெற்று தருகிறோம் என்று ஆல்வின் ஞானதுரையிடம் ஆசை காட்டி சம்மதிக்க வைத்தனர்.
நூதன கொள்ளை
இதையடுத்து, அவரை சென்னை ஐஸ்-அவுஸ் பகுதியில் உள்ள நவாசின் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். ரூ.90 லட்சம் பணமும் நவாசிடம் கொடுக்கப்பட்டது. பணத்தை எண்ணி பார்ப்பதாக எடுத்து சென்ற நவாஷ் திடீரென பணத்துடன் மாயமாகி விட்டார். ரூ.90 லட்சம் பணமும் நூதன முறையில் கொள்ளை அடிக்கப்பட்டது.
இதற்கு பாலன், வேலாயுதம் ஆகியோரும் உடந்தை என்றும், நவாசை கண்டுபிடித்து ரூ.90 லட்சம் பணத்தையும் மீட்டுத்தர வேண்டும் என்றும் ஆல்வின்ஞானதுரை ஐஸ்-அவுஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
3 பேர் கைது
விசாரணை முடிவில் பாலன் (வயது 41), வேலாயுதம் (55) மற்றும் சென்னை வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த ஹசன்காதர் (41) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.12.40 லட்சம் மீட்கப்பட்டது. மீதி பணத்துடன் தப்பி ஓடிய நவாசை போலீசார் தேடி வருகிறார்கள்.