கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கும் இழப்பீடுத் தொகை ரூ.10 லட்சம் என்பது அதிகம் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இழப்பீட்டுத் தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை எதிர்த்து முகமது கோஸ் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், கள்ளச்சாராயம் குடிப்பது சட்டவிரோதம். எனவே, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாகக் கருதக் கூடாது என்றும் தீ விபத்து உள்ளிட்ட இன்னல்களால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணமாக குறைந்த தொகை வழங்கும் நிலையில், கள்ளச் சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எந்த அடிப்படையில் அதிக நிவாரணம் வழங்கப்படுகிறது என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகளோ, சமூக சேவகர்களோ, சமூகத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்களோ அல்லாத நிலையில் அவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் இழப்பீடு என்பது அதிகம். இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், இந்தத் தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கடந்த 18 ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சாராயம் குடித்தவா்களில் சிலர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், சிலா் சேலம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் இதுவரை 64 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் சிகிச்சையில் உள்ளனர். இந்த விவகாரத்தில் 10க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் இந்த சம்பவத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும் கூடுதல் நிவாரணங்களையும் அறிவித்திருந்தது.

கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்பாக, விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் அமைப்புகள் சார்பில் கண்டனங்களும் பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டன. இந்த நிலையில்தான், இழப்பீடு தொகை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, விசாரணை தொடங்கியிருக்கிறது.

இந்த இழப்பீட்டுத் தொகை அல்லாமல், கள்ளச்சாராய பலி குறித்து பேரவையில் உரையாற்றியபோது, முதல்வர் ஸ்டாலின், கூடுதல் நிவாரணங்களையும் அறிவித்திருந்தார். அதாவது, கள்ளச்சாராய சம்பவத்தில் பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்.

கள்ளச்சாராயம் குடித்து பெற்றோர்கள் இருவரும் இறந்திருந்தால், அவர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பில் வளர, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை மாத பராமரிப்புத் தொகையாக தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும்.

பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களின் பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிலையான வைப்புத் தொகையில் வைக்கப்படும். அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அந்தத் தொகை வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும்.

பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here