சென்னை பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் நோக்கி வந்த மின்சார ரயில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பயங்கர சத்தத்துடன் நடைமேடை மீது ஏறியது. இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து ரயிலில் இருந்து குதித்து நாலாப்புறமும் தெறித்து ஓடினர்.
இந்த ரயில் விபத்தில், பயணிகள் யாருக்கும் எந்த உயிர் சேதம் எதுவும் இல்லை. அதே சமயம் ரயில் ஓட்டுநர் சங்கர் காயம் அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மீட்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்று விடுமுறை நாள் என்பதால் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது. இருந்தபோதிலும் ரயில் பெட்டியானது பலத்த சேதம் அடைந்திருப்பதால் ரயில்வே நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்து உள்ளது.
ரயிலின் பிரேக் பிடிக்காததால் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதன் பின்னர், சேதம் அடைந்துள்ள பெட்டியை அகற்றிவிட்டு அங்கு இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.