சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த மஸ்தான் கனி (வயது 28), கலந்தர் ஷாஜகான் (30), சுல்தான் (30) ஆகிய 3 பேரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். அதிகாரிகளிடம் 3 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசினர்.

இதனால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் 3 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது 3 பேரும் தங்களுடைய உள்ளாடைகளுக்குள் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்த பாக்கெட்டுகளில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

3 பேரிடம் இருந்தும் ரூ.59 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here