திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் விற்பனையைத் தடுப்பதற்காக மதுவிலக்கு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் கிடங்கு ஒன்றில் கள்ளத்தனமாக சாராயம் தயாரிக்க பயன்படுத்தும் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கிடங்கின் ஓர் அறைக்கு பூட்டு போடப்பட்டு இருந்தது. போலீஸார் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுமார் 1,500 லிட்டர் மெத்தனால் ரசாயன கலவை கலன்களில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், தடை செய்யப்பட்ட மெத்தனால் ரசாயன கலவையை பதுக்கி வைத்திருந்ததாக கவுதம், பரமசிவம், ராம்குமார், பென்சிலால் ஆகிய 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் விநியோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாதேஷ் என்பவருடன் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா? எனவும் விசாரித்து வருகின்றனர்.