சென்னையை அடுத்த கொளத்தூர் பாலகுமாரன் நகர் 1-வது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் கமலா. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் செல்போனை சார்ஜரில் போட்டுவிட்டு வெளியே அமர்ந்திருந்தார்.
அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியது. இதில் வீட்டில் இருந்த வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்கள தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கமலா மற்றும் அக்கம் பக்கத்தினர் இதுபற்றி கொளத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த செம்பியம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடி வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர்.
இதுபற்றி கொளத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், செல்போனை நீண்டநேரமாக சார்ஜர் போட்டு இருந்ததால் அதிக அளவு மின்சாரம் பாய்ந்து சார்ஜர் வெடித்து, வீட்டில் தீப்பிடித்தது தெரியவந்தது.
ஆவடியை அடுத்த அயப்பாக்கம் அன்னை சத்யா நகர், இந்திரா தெருவை சேர்ந்தவர் ராஜி (வயது 62). இவர், சென்னை திருமங்கலத்தில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.
குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி செல்வி மற்றும் 2 மகன்களை பிரிந்து, தனது வீட்டின் மாடியில் தனியாக குடிசை அமைத்து அதில் ராஜி வசித்து வந்தார். நேற்று ராஜி வேலைக்கு சென்றிருந்தபோது திடீரென அவரது குடிசை தீப்பிடித்து எரிந்தது.
இதில் அங்கிருந்த கட்டில், மெத்தை மற்றும் சிலிண்டர் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருமுல்லைவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.