ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசக் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்றிரவு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து இன்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
பந்த் காரணமாக ஆந்திராவில் பரவலாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கடைகள் அனைத்தும் மூடியிருக்கின்றன. பேருந்துகள் இயங்கவில்லை. திருப்பதி – திருமலை இடையே மட்டும் ஒன்றிரண்டு வாகனங்கள் இயங்குகின்றன. பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாததால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகின்றன.
இதனிடையே ஆங்காங்கே தெலுங்கு தேசம் கட்சியினர் மறியல், தர்ணாவில் ஈடுபட முயற்சிப்பதும் அவர்களைப் போலீஸார் கைது செய்வதும் நடைபெறுகிறது. தெலுங்கு தேசக் கட்சியின் எம்எல்ஏ.,க்கள், எம்.பி.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க போலீஸார் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
கைதி எண் 7691:
ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவர்மம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு கைதி எண் 7691 ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு வீட்டு உணவு, மாத்திரை, மருந்துகள் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளுடன் கூடிய அறையே அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அவருக்கு ஜாமீன் கோரி அவர் தரப்பு வழக்கறிஞர்கள் இன்று மனு தாக்கல் செய்யவுள்ளனர். இது ஒருபுறம் இருக்க சிஐடி தரப்பில் அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது. சந்திரபாபு நாயுடுவை வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு பின்னணி:
சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் (2014-19) இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக திறன் மேம்பாட்டு கழகத்தில் சீமென்ஸ் நிறுவனம் மூலம் பொறியியல் கல்லூரிகள் உட்பட தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ. 33 ஆயிரம்கோடி செலவாகும் என தீர்மானிக்கப்பட்டு, அதில் ஆந்திர அரசு 10 சதவீதம் நிதி வழங்கியது. 10 சதவீதம் மற்றும் ஜிஎஸ்டி ரூ. 40 லட்சம் என மொத்தம் ரூ. 371 கோடி நிதியை சீமென்ஸ் நிறுவனத்திற்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதலின் பேரில் அப்போதைய சந்திரபாபு நாயுடு அரசு வழங்கியது. இதில் ரூ. 118 கோடி ஊழல் நடந்ததாகவும், அதில் சந்திரபாபு நாயுடுவுக்கும் தொடர்பு இருப்பதாககடந்த 2021ம் ஆண்டில் தற்போதைய ஜெகன் அரசு குற்றம்சாட்டியது.
இது தொடர்பாக சிஐடி போலீஸார் 2021ம் ஆண்டே வழக்குபதிவு செய்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரஉள்ளதால், முக்கிய எதிர்க் கட்சியான தெலுங்கு தேசம் தலைவரான சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை துரிதப்படுத்த ஜெகன் அரசு முடிவு செய்துள்ளது.
அதன் பேரில். கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 1 மணிக்கு, கர்னூல் அருகே உள்ள நந்தியாலம் ஆர்.கே திருமண மண்டபத்தில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பேருந்தில் உறங்கி கொண்டிருந்த சந்திரபாபு நாயுடுவை சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர்.