சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த ரத்தினம் மகன் இரவிச்சந்திரன் என்பவர் காரைக்குடி நகைக்கடை பஜார் வியாபாரிகளிடம் சுமார் 1 கிலோ 200 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை வாங்கி கொண்டு 11.03.22 அதிகாலை காரைக்குடியிலிருந்து சென்னைக்கு சென்று சவுகார்பேட்டை நகை பேக்டரியில் கொடுத்து விட்டு, அங்கிருந்து நகைக்கடை உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய சுமார் 1 கிலோ தங்க நகை மற்றும் பணம் 2 கோடியே ஒரு லட்சம் ஆகியவற்றை பேக் மற்றும் கட்டைப்பையில் வைத்துக்கொண்டு தனியார் பேருந்தில் 12.03.23 காலை 5 மணியளவில் காரைக்குடி கழனிவாசல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது இன்னோவா காரில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வலுக்கட்டாயமாக காரில் பின்பக்க சீட்டில் ஏற்றி கடத்திக்கொண்டு சென்று திருச்சி சாலையில் மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரி குறுக்கு சாலையயைக் கடந்து வாதி இரவிச்சந்திரனை கீழே தள்ளிவிட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக கூறி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கின் குற்றவாளிகளை கைது செய்ய தென்மண்டல காவல் துறை தலைவர் அவர்களது ஆணைக்கிணங்க, இராமநாதபுரம் சரக காவல் துறை துணை தலைவர் அவர்களது உத்தரவின்பேரில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது மேற்பார்வையில், காரைக்குடி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் IPS அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.நமச்சிவாயம் ஆகியோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு தனிப்படையும் ஒவ்வொரு விதமான பணிகள் மேற்கொண்டு குற்றச்சம்பவத்திற்கு பயன்படுத்திய இன்னோவா காரின் மூலம் குற்றவாளிகளான சென்னையைச் சேர்ந்த சூரியா என்ற நாகேந்திரன், பால்ராஜ், விஜயகுமார், சாமுவேல், சதீஸ் மற்றும் பெருமாள் ஆகியோரை கைது செய்து அவர்கள் கொள்ளையடித்து சென்ற பணம் மற்றும் நகைகளை மீட்டனர். இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்கள் தனிப்படையினரின் சிறப்பான செயலை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்கள்.