திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குள் கேமரா மற்றும் கேமரா பொருத்திய கைப்பேசி உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அக்டோபர் 1 முதல் தடை விதிக்கப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

மலையடிவாரத்தில் கைப்பேசிகளை பாதுகாக்கும் மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கைப்பேசிகளை பாதுகாக்க ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இந்து அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இதே நடைமுறை அனைத்து கோயில்களிலும் பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. பழனி மலைக்கோயில் உள்பிரகாரத்தில் புகைப்படம், விடியோ எடுக்க அனுமதியில்லை என அறிவிப்பு பதாகை வைத்துள்ள போதிலும், பக்தா்கள் தங்கத்தோ், தங்கக் கோபுரம், கருவறை என அனைத்துப் பகுதிகளிலும் கைப்பேசியைக் கொண்டு படங்கள், விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிா்ந்து வருகின்றனா்.

இந்த நிலையில் பழனி கோயிலில் மூலவரை கைப்பேசியில் படமெடுத்தது தொடா்பாக பக்தா் ஒருவா் கோயிலின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கோயிலுக்குள் பக்தா்கள் கைப்பேசி கொண்டு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தியதோடு மட்டுமன்றி, அதற்கு திருக்கோயில் நிா்வாகம் செய்துள்ள ஏற்பாடுகள், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீதான நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியது.

இதையடுத்து பழனி திருக்கோயில் நிா்வாகம் பக்தா்கள் கைப்பேசியை பாதுகாப்பாக வைத்துச் செல்ல வசதியாக பாதுகாப்பு அறைகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

திருப்பதி போல பழனி கோயிலில் கைப்பேசிக்கு தடை என்ற அறிவிப்பை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டால், பக்தா்கள் கைப்பேசியை எடுத்து வருவதைத் தவிா்த்து விடுவா். அறைகள் எடுத்து தங்குபவா்கள் அறையில் கைப்பேசியை வைத்து விடுவாா்கள். வெளியூரில் இருந்து வரும் பக்தா்கள் கைப்பேசியை வைக்க தனி அறை வழங்கி டோக்கன் கொடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்தே, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கும் வகையில், அவற்றைப் பாதுகாக்க அறைகளை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here