கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பி & டி காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இவர் தனது வீட்டு அருகே இளைஞர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதிலுள்ள ஓர் வீட்டில் பனியன் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் திருநெல்வேலியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர் தங்கியுள்ளார். இவருக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் இவரது நண்பர்களான திருநெல்வேலியைச் சேர்ந்த ஹரிஹரன், முத்துவேல், சங்கர், ராஜா, முருகன் ஆகியோர் இவரது வீட்டிற்கு வந்து இரவு முழுவதும் மதுஅருந்தியும், கஞ்சா பயன்படுத்திக் கொண்டும், போதையில் கத்தியபடியும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை வீட்டின் உரிமையாளர் சண்முகசுந்தரம் கண்டித்துள்ளார். 

இன்று காலை சிவா திருநெல்வேலிக்கு சென்ற நிலையில் போதை மயக்கத்திலிருந்த அவரது நண்பர்கள் 5 பேரும் மீண்டும் மதியம் 2 மணியளவில் அரிவாள், கத்தி கம்புகளுடன் இவர்களை கண்டித்த வீட்டின் உரிமையாளர் சண்முகசுந்தரத்தையும், அவரது மனைவி பூர்ணிமா மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து தடுக்க வந்த பக்கத்து வீட்டுகாரரான ஷ்யாம் என்பவரை வெட்டியுள்ளனர். இதில் அவருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. 

போதை ஏறிய நிலையில் வீதியில் அரிவாளுடன் சுற்றிய 5 பேரும், அங்கிருந்த பொதுமக்களையும் மிரட்டி, எதிரில் சாலையில் வந்து கொண்டிருந்த அபி, சசி, பிருந்தா, தர்ணிகா உள்ளிட்டவர்களையும் தாக்கியதில் அவர்களுக்கும் படுகாயங்கள் ஏற்பட்டன. மேலும் அங்கு வந்த முன்னாள் கவுன்சிலர் முத்துலட்சுமியைத் தாக்கியதுடன், அவரை அரிவாளால் வெட்ட துரத்தியுள்ளனர். 

அவர் வீட்டிற்குள் சென்று கதவை தாளிட்டதால் அவர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளனர். தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர் அன்னம் தலைமையில் காவல்துறையினர்  மற்றும் நூற்றுக்குமேற்பட்ட பொதுமக்கள் இவர்களை பிடிக்க முற்பட்டனர்.

இவர்கள் 5 பேரும் காவல்துறையினரை கண்டதும் அருகில் இருந்த ராவத்தகொல்லனூர் பள்ளம், கே.எஸ்.பி பள்ளம் வழியாக தப்பித்து ஓடியுள்ளனர். பொதுமக்கள் தொடர்ந்து துரத்தியதால் தென்றல் நகரில் உள்ள தென்னந்தோப்பு புதர்களுக்குள் புகுந்து மறைந்து கொண்டனர். ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நான்குபுறமும் சுற்றி வளைத்து தேடினர்.  அருகில் சென்றவர்களை 5 பேரும் தாங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்ட முற்பட்டனர். 

இறுதியில் இவர்களை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 3 மணிநேரம் நடந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேருக்கும், பொதுமக்கள் தாக்கியதில் பலத்தகாயம் ஏற்பட்டது. இவர்களும், படுகாயமுற்ற பொதுமக்களும், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கஞ்சா போதையில் வெளி மாவட்டத்தை சேர்ந்த 5 இளைஞர்கள், 8 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here