ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் தற்போது கனடாவில் வசித்து அங்கேயே பணியாற்றி வருகிறார். இவருக்கும் வித்தியா என்பவருக்கும் திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பச்சையப்பன் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், விவாகரத்து வேண்டி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் இருவருக்குள்ளும் சமாதானம் ஏற்பட்ட நிலையில், சேர்ந்து வாழ்வதாக நீதிமன்றத்தில் கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதற்கிடையில் பச்சையப்பன் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த காலகட்டத்தில் தனது மறுமணத்திற்காக மேட்ரிமோனியில் விவாகரத்தான அல்லது கணவனை இழந்த பெண்கள் தேவையென பதிவு செய்துள்ளார். அப்போது பச்சையப்பனை தொடர்புகொண்ட செந்தில் பிரகாஷ் என்பவர், தான் சென்னையைச் சேர்ந்தவர் எனவும், தனது தங்கை ராஜேஸ்வரி கணவனை இழந்தவர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது தங்கைக்கு தங்களை மிகவும் பிடித்திருப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி பேசத் தொடங்கியுள்ளார். இவ்வாறு ஆசை வார்த்தைகள் பேசி கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது சிறிது சிறிதாக ஆன்லைன் மூலம் மட்டுமே 1 கோடியே 35 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ராஜேஸ்வரியை பார்ப்பதற்காக பச்சையப்பன் கனடாவில் இருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களுடன் சென்னைக்கு வந்து ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் அறையெடுத்து தங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து செந்தில் பிரகாஷை தொடர்புகொண்ட பச்சையப்பன் தான் ராஜேஸ்வரியை பார்க்க பரிசுப் பொருட்களுடன் கனடாவில் இருந்து வந்திருப்பதாகக் கூறியுள்ளார். பின்னர் ராஜேஸ்வரிக்காக காத்திருந்த நிலையில் அங்கு வந்த செந்தில் பிரகாஷ் பச்சையப்பனை மிரட்டி அவரிடம் இருந்த பரிசுப் பொருட்களை பிடுங்கிக் கொண்டு அவரைத் தாக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன பச்சையப்பன் மீண்டும் கனடாவிற்கே திரும்பிச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் மனைவியுடன் சமரசமாகி ஒன்றாக வாழ சம்மதித்த நிலையில், நடந்தவற்றை மனைவியிடம் தெரிவித்து அவர் அறிவுறுத்தலின் அடிப்படையில் சென்னைக்கு வந்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெரம்பூரைச் சேர்ந்த செந்தில் பிரகாஷ் என்பவரை கைது செய்து அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கனடா வாழ் இந்தியரான பச்சையப்பனிடம் இருந்து செந்தில் பிரகாஷ் மோசடி செய்து பறித்த பணத்தை மீட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.