மெரினா கடற்கரை நீச்சல்குளத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்ததையடுத்து, அந்த நீச்சல் குளம் தற்காலிகமாக மூடப்பட்டது.
பள்ளிக்கரைணையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தஞ்சாவூரில் பணியாற்றி வருகிறார். வார விடுமுறை நாளில் சென்னைக்கு வந்த இவர், தனது குடும்பத்துடன் சனிக்கிழமை மதியம் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். 3.15 மணியளவில் அங்குள்ள அண்ணா நீச்சல் குளத்தில் குடும்பத்துடன் குளித்துள்ளார். அனைவரும் மேலே வந்த நிலையில், அவரது 5 வயது மகன் அனிருத் கிருஷ்ணன் காணாமல் போனதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
நீச்சல் குளத்தில் தண்ணீருக்கு அடியில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனை, கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அனிருத் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உத்தரவின்பேரில், அண்ணா நீச்சல் குளம் தற்காலிகமாக மூடப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை நீச்சல்குளம் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவியை அறிவித்துள்ளார். மேலும், சிறுவனின் இறப்பு குறித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறித்தியுள்ளார்.