இராமநாதபுரம்:
இராமநாதபுரம் மாவட்ட கமுதி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வாழை மரங்களில் குலை நோய் பாதிப்பால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கமுதி அருகே கிளாமரம்,கோரப்பள்ளம், கீழ ராமநதி மேல ராமநதி, நீராவி உட்பட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பல ஆண்டுகளாக வாழை விவசாயம் செய்து வருகின்றனர்.ஒவ்வொரு பகுதியிலும் வாழைகள் பயிரிடப்பட்டு தினமும் போதுமான அளவு தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
இந்நிலையில், ஒரு சில மரங்களில் நோய் தாக்கப்பட்டு ஏராளமான மரங்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தற்போது குலை நோயால் நன்கு செழித்து வளர்ந்துள்ள வாழை மரங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் 12 மாதங்கள் வளர்க்கப்பட்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை. வாழை விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இப்பகுதி விவசாயிகள் கூறுகையில்:
பல ஆண்டுகளாக வாழை விவசாயம் செய்கிறோம்.நாட்டு வாழை உட்பட பல்வேறு ரகங்கள் 12 மாதம், 18 மாதம் வளரும் பருவத்தில் உள்ளது. வாழை விவசாயத்திற்கு போர்வெல் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கிளாமரம் பகுதியில் வாழை மரத்தில் குலைநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மரங்கள் நன்கு செழித்து வளர்ந்து குலை தள்ளிய நிலையில் குலை நோய் தாக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது அருகில் உள்ள மரங்களையும் பாதிக்கிறது. குலை நோயை தடுப்பதற்காக ஊசி செலுத்தப்படுகிறது. ஒரு ஊசியின் விலை ரூ.60 என்பதால் கூடுதல் பணம் செலவழிக்கப்பட்டு வருகிறது. எனவே நோயால் பாதிக்கப்படும் வாழை மரங்களை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும், என்றனர்.