தமிழின் தனித்துவத்தைச் சுவைபட விளக்கிய மாபெரும் கவிஞர் சுப்ரமணிய பாரதி. இவரின் உணர்வெழுச்சியால் பிறந்த பல கவிதைகள், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் கனல் தெறித்தன. தனக்குள் எழும் கருத்துகளை சற்றும் அச்சமின்றி தெளிவுடன் எடுத்துரைத்தவர் பாரதி.

ஒரு கவிஞன் என்ற ஒற்றை வரியில் இவரின் செயல்பாடுகளை முடக்கிவிட முடியாது. சமூக ஆர்வலர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், தமிழ் மொழியையே தன் சுவாசமாகக் கொண்டவர், எழுச்சிமிகு சிந்தனைகளின் ஏகலைவன் என, பன்முகத்தன்மைகொண்ட தமிழர், பாரதி. இந்திய விடுதலைப் போரில் இவரின் தமிழ் பெரும்பங்காற்றியதன் காரணமாகத்தான் இவரை ‘தேசிய கவி’ எனப் போற்றிப் புகழ்ந்தனர்.


                                             பிறப்பு

திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயர் – லட்சுமி அம்மாள் தம்பதிக்கு 1882ம் ஆண்டு டிச., 11ம் தேதி பிறந்தார் சுப்ரமணிய பாரதியார். சிறு வயதிலேயே தமிழ் மொழி அறிவும் தமிழ் உறவுகள் மீதான அக்கறையும் இவரிடம் இருந்தது. தமிழ் மொழி மீதான சிந்தனைத் தெளிவும் பற்றும் வெகு விரைவிலேயே இவரை மாபெரும் புலவராக மாற்றியது. தன் 11ம் வயதிலேயே கவி புனையும் ஆற்றலையும் அறிவையும் பயிற்சியால் வென்றார் பாரதி. 1897ல் பாரதியின் இல்லறத்தில் இனியாளாக பங்குகொண்டார் செல்லம்மா.

            இலக்கியப் பணி

தமிழ் மொழி மீதும், இலக்கியப் பணி மீதும் தணியாத ஆர்வம்கொண்டவர் பாரதி. தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், சம்ஸ்கிருதம், வங்காளம், இந்தி என, பலவேறு மொழிகளைப் பயின்றார். ‘சுதேசமித்திரன்’ என்ற தமிழ் பத்திரிகையில், 1904ம் ஆண்டு முதல் 1906ம் ஆண்டு வரை உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

                            பகவத் கீதையும்… பாஞ்சாலி சபதமும்!

இந்துக்களின் சுவாசமாக விளங்கும் பகவத் கீதையை 1912ல் தமிழில் மொழிபெயர்த்தார். பரத கண்டத்தின் மாபெரும் காவியமான மகாபாரதத்தின் ஒரு பகுதியை ‘பாஞ்சாலி சபதம்’ என்ற பெயரில் படைத்தார். கவிதைகள் புனைவதோடு சமுதாயக் கட்டுரைகளும் எழுதினார்.

                         சுதந்திரப் போராட்டத்தில் பாரதி

சுதந்திரப் போராட்டத்தின்போது இவரின் கருத்துகளும் கட்டுரைகளும் கவிதைகளும் உணர்ச்சிப் பிழம்பாகவும், காட்டுக் கனலாகவும் எழுந்து விடுதலை உணர்வை அனைவரது உள்ளத்திலும் விதைத்தன. மக்கள் மத்தியில் விடுதலை விழிப்பு உணர்வை உருவாக்கியதில் பாரதி, பார் போற்றும் கவிஞரானார். இவரின் எழுச்சிமிகு உரையில் தமிழர்கள் விழிந்தெழுந்ததைக் கண்ட ஆங்கிலேயர், பாரதியின் பல்வேறு படைப்புகளுக்குத் தடைவிதித்து, அவரை சிறையில் அடைத்தனர்.

தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமின்றி, உலக இலக்கிய ஆர்வலர்களாலும் கொண்டாடப்பட்ட பாரதி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில் யானையின் கால்களால் காயமடைந்து, உடல் நலிவடைந்து, 1921ம் ஆண்டு செப்., 11ம் தேதி உலகைவிட்டு பிரிந்தார்.

தமிழ் இலக்கிய உலகம் மட்டுமல்லாது, உலக இலக்கிய அரங்கிலும் மிகமுக்கிய இடத்தைப் பிடித்த பாரதி நினைவு நூற்றாண்டை கடைபிடிக்க இருக்கிறோம். இதில், பாரதியார் குறித்த தங்களது கருத்துக்களை ‘தினமலர்’ இணையதளத்தில் நமது வாசகர்கள் எழுதலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here