இந்திய ராணுவத்தின் உளவாளியாக இருக்கும் விஜய் மற்றொரு நாட்டில் தீவிரவாதியை பிடிக்கும் பொழுது தவறுதலாக ஒரு குழந்தை இறந்துவிடுகிறது. அதனால் தனது வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் இருக்கிறார். எதிர்பாராதவிதமாக ஒரு வணிக வளாகத்தை தீவிரவாதிகள் ஹைஜாக் செய்ய அதனுள் மாட்டிக்கொள்ளும் விஜய், பின்பு அங்கிருந்து மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே பீஸ்ட் படத்தின் கதை. படத்தின் டிரைலர் வெளியான போதே கிட்டத்தட்ட மொத்த கதையையும் சொல்லியிருந்தனர்.
அதே போல தான் படமும் அமைந்திருந்தது. பீஸ்ட் முதல் பாதி, இரண்டாம் பாதி என மொத்த படத்தையும் விஜய் தன் தோளில் சுமக்கிறார். அவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் சாதாரண காட்சியை கூட வேற லெவல் காட்சியாக மாற்றுகிறது. இவருக்கு ஜோடியாக நடித்துள்ள பூஜா ஹெக்தே ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார். இதைத்தாண்டி படத்தில் சொல்லும் அளவிற்கு பெரிதாக ஒன்றுமே இல்லை.
விஜய்யின் இன்ட்ரோ சீனிலேயே ஸ்க்ரீன் முன் ஆடிக்கொண்டு இருந்த ரசிகர்கள் அமைதியாக சீட்டில் உட்கார்ந்து விட்டனர், அப்படி ஒரு சாதாரணமான இன்ட்ரோவாக விஜய்க்கு இருந்தது. சுற்றி 10 பேர் துப்பாக்கி வைத்து ஹீரோவை சுட்டாலும் பதிலுக்கு ஹீரோ சுடும் ஒரு புல்லட் வில்லனை சரியாக கொள்ளும் என்ற அரதப்பழசான லாஜிக்கே இல்லாத காட்சியை படம் முழுவதும் வைத்துள்ளார் நெல்சன். ஹீரோயின் இன்ட்ரோ, பாடல், சிரிப்பே வராத காமெடியான முதல் பாதி மெதுவாக செல்கிறது. சரி இரண்டாம் பாதி விறுவிறுப்பாக இருக்கும் என்று பார்த்தால் அது இதைவிட மெதுவாக செல்கிறது.
ஆனால் பீஸ்ட் படத்தில் அவ்வளவு காமெடியன்கள் இருந்தும் சுத்தமாக எடுபடவில்லை. மால்லுக்குள் நடக்கும் காட்சிகள் எதிலுமே ஒரு சதவீதம் கூட லாஜிக் இல்லை. படம் முழுக்க வரும் செல்வராகவன் விஜய்க்கு பில்டப் மட்டுமே கொடுத்துள்ளார். ஒரு காட்சியில் கூட இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் படி இல்லை. மேலும் அரசாங்கம் முடிவு எடுப்பது போல் காட்டப்படும் ஒவ்வொரு காட்சிகளும் படுமோசமாகவே இருந்தது. சுவாரசியமே இல்லாத ஒவ்வொரு காட்சியையும் பார்க்க வைப்பது அனிருத்தின் பிஜிஎம் தான். ஒவ்வொரு சீனிற்கும் கடுமையாக உழைத்துள்ளார். இதே உழைப்பை இயக்குனர் நெல்சன் கொஞ்சம் போட்டிருக்கலாம். மிகப்பெரிய ஹிட்டடித்த அரபி குத்து பாடல் தேவையே இல்லாத இடத்தில் வருகிறது என்றால் ஜாலியோ ஜிம்கானா பாடல் படம் முடிந்த பின்பு வருகிறது. விஜய்யின் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக இருந்தாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆனா பீலிங்கே வருகிறது. கதையே இல்லாமல் விஜய்யை 2 மணி நேரம் நடக்க விட்டிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். கமர்சியல் படங்களில் லாஜிக் மீறல்கள் சாதாரணம் தான், அதற்கென்று அள்ளி கொட்டினால் தாங்கிக்கொள்ள முடியாது.
மொத்தத்தில் ‘பீஸ்ட்’ படம் சப்ப….பட்டாசு….