சென்னையில் பல்வேறு வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் 2 வங்கி ஊழியர்கள் உட்பட 9 பேரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள ஹெச்எஸ்பிசி வங்கி கிளையில் பிரிதிவிராஜ் என்பவருடன் கூட்டு சேர்ந்து வங்கி ஊழியர் நஜுமுதீன் போலி ஆவணங்கள் மூலம் போலி நபர்களின் பெயரில் 44 வங்கி கணக்குகளை தொடங்கியுள்ளார். அதில் 15 பேருடன் தனி நபர் கடன் அளிக்கப்பட்டதாக மோசடி செய்துள்ளார்.
ஒரு கோடியே 51 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நஜுமுதீன் மற்றும் பிரிதிவிராஜ் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக்கடன் வாங்கி கொடுத்ததாக பாரத ஸ்டேட் வங்கியின் மேடவாக்கம் கிளை மேலாளர் பாலாஜி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக்கடன் வாங்கி கொடுத்ததாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 6 பேரும் சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக தெரிகிறது.