அய்யா வைகுண்ட சாமியின் 192-வது அவதார தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு திருச்செந்தூர் பதியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி வாகன பேரணி புறப்பட்டது. பேரணி திருச்செந்தூர் சீர்காய்ச்சி, திசையன்விளை, உடன்குடி, கூடங்குளம், செட்டிகுளம், ஆரல்வாய்மொழி வழியாக நேற்றிரவு நாகர்கோவிலை வந்தடைந்தது.
அதேபோல் நேற்று காலையில் திருவனந்தபுரத்தில் இருந்து மற்றொரு வாகன பேரணி புறப்பட்டது. இந்த வாகன பேரணி திருவனந்தபுரம், பாறசாலை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைந்தது. இதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள நிழல் தாங்கல்களில் இருந்து அவதார தின ஊர்வலத்தில் கலந்துகொள்ள நடை பயணமாக வந்த பக்தர்கள் நேற்று இரவு நாகர்கோவில் நாகராஜா திடலை வந்தடைந்தனர்.
பின்னர் நாகராஜா கோவில் மண்டபத்தில் அய்யாவழி சமய மாநாடு, திருஏடு வாசிப்பு, கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் அரசியல் தலைவர்கள், ஆன்மிக தலைவர்கள் கலந்து கொண்டனர். இதுபோல் நேற்று மாலை 6 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதியில் இருந்து வைகுண்ட தீபம் கொண்டு சென்று ஆதலவிளை மாமலையில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. சாமிதோப்பு பதியில் இருந்து குரு ராஜசேகரன் தீபம் ஏற்றி கொடுத்தார். ஆதலவிளை மாமலையில் வக்கீல் அஜித் தீபம் ஏற்றினார்.
அய்யா வைகுண்ட சாமியின் அவதார தினமான இன்று அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்புக்கு அவதார தின விழா ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்திற்கு குரு. சுவாமி தலைமை தாங்கினார். ஊர்வலத்தின் முன்பு முத்துக்குடை ஏந்தியபடி, ‘அய்யா சிவசிவ அரஹரா அரஹரா’ என்ற நாமத்தை உச்சரித்தபடி கையில் காவிக்கொடியை ஏந்திபக்தர்கள் முன்சென்றனர் மேலும் கோலாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த ஊர்வலம் நாகர்கோவில், கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை, வடக்குதாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலைமைப்பதியை வந்தடைகிறது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இரவு சாமிதோப்பு தலைமைப்பதியில் வாகன பவனியும், அய்யா வழி மாநாடும் நடக்கிறது.
அய்யா வைகுண்ட சாமியின் அவதார தினத்தையொட்டி இன்று காலை திருச்செந்தூர் பதியில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அய்யா வைகுண்டருக்கு திருச்செந்தூர் கடற்கரையில் பதமிடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அய்யா வைகுண்டசாமி அவதாரதினத்தையொட்டி சாமிதோப்புக்கு பக்தர்கள் வருவதற்கு வசதியாக நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.