பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்விச் செயல்பாடுகள் மற்றும் தனித்திறன்களில் சிறந்து விளங்கிய 10 மற்றும் 12ம் வகுப்பைச் சேர்ந்த 30 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையினை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கிப் பாராட்டினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2021 -2022 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் கல்விச் செயல்பாடுகள் மற்றும் தனித்திறன்களில் சிறந்து விளங்கிய மாணவர்கள் தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்டனர். அதனடிப்படையில், 10 ஆம் வகுப்பில் 15 மாணவர்கள், 12 ஆம் வகுப்பில் 15 மாணவர்கள்  ஆக மொத்தம் 30 மாணவர்கள் மாவட்ட அளவில் காமராஜர் விருதிற்கு தெரிவு செய்யப்பட்டு பெயர்ப்பட்டியல் சென்னை பள்ளிக்கல்வி ஆணையரகத்திற்கு அனுப்பப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையாக ரூ.10,000-க்கான காசோலையும், 12 ஆம் வகுப்பு மாணவர்கள்  ஒவ்வொருவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையாக தலா ரூ.20,000-க்கான காசோலையும் ஆக கூடுதலாக ரூ.4.50 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. க.கற்பகம், இ.ஆ.ப அவர்கள் வழங்கி, ஒவ்வொரு மாணவ மாணவியரிடமும் அவரவரின் எதிர்கால இலட்சியத்தினைக் கேட்டறிந்து இலட்சியத்தினை எட்டும் வரை கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டுமெனவும் பாராட்டி, நிச்சயமாக உயர்கல்வி பயில வேண்டும் எனவும் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலர் திரு.ரெ.அறிவழகன், மேல்நிலைக்கல்வி நேர்முக உதவியாளர் ரெ. சுரேஸ் அவர்கள் மற்றும் இடைநிலைக்கல்வி நேர்முக உதவியாளர் திரு. ந.முத்துக்குமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here