திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து மேயர், துணை மேயர் போன்ற பொறுப்புகளை ஏற்றபின் மாநகராட்சி எல்லைப் பகுதியில் 2 வாரங்கள் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருந்து வந்தது. தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு தள்ளப்படும் நிலைமையில் ஆவடி மாநகராட்சி உருவெடுத்து வருகிறது.
தற்போது தூய்மைப் பணியாளர்கள் மந்தமாக செயல்பட்டு வருவதால் ஆவடி மாநகராட்சி முழுவதும் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது .இந்த குப்பைகளை அள்ளும் பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களும் ஆய்வு செய்யாமல் அவரவர்கள் பணியினை செய்து வருவதால் இன்று குப்பைகள் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.
இதனால் மாடுகள், பன்றிகள், கோழிகள் போன்ற விலங்குகள் குப்பைகளை கிளறி சாலை முழுவதும் பரவிடச் செய்துள்ளன. குப்பை பரவி கிடப்பதால் வாகன ஓட்டிகளுக்கு துர்நாற்றம் வீசுவதாகவும், அந்த பகுதியில் பயணிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
நோய் தொற்று பரவுவதற்குள் தினமும் தூய்மை பணி நடைபெற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனை மாநகராட்சி ஆணையர் சரஸ்வதியும், மேயரும் பார்வையிட்டு ஆவடி மாநகராட்சியை தூய்மை நகராட்சியாக மாற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.