கோவையில் பல்வேறு ஆட்டோக்கள் இன்சூரன்ஸ் செய்யப்படாமலும், ஆர்.டி.ஓ தகுதிச் சான்றிதழ் எனப்படும் எஃப்.சி செய்யாமலும் இயக்கப்படுவதால் அதில் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மெட்ரோ நகரமான கோவையில் பிரதான போக்குவரத்து சாதனமாக பேருந்துகள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக ஆட்டோக்களே பொதுமக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாக உள்ளது.
கொரோனா காலத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் ஆட்டோ ஓட்டுநர்கள் வருவாய் முழுமையாக தடைபட்டது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் ஊரடங்கு காலத்தில் ஆட்டோக்களுக்கான காப்பீடு மற்றும் ஆர்.டி.ஓ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதனிடையே கொரோனா தாக்கம் குறைந்து தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனாலும், கோவை மாநகரில் இயங்கும் பல்வேறு ஆட்டோக்கள் ஆர்.டி.ஓ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்படாமலும், காப்பீடு செய்யாமலும் இயக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய ஆட்டோவில் பயணிகள் பயணிக்கும் போது, அந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானால், பயணிகளுக்கு கிடைக்க வேண்டிய காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் போகும் அச்சம் உள்ளது. எனவே குறித்த இடைவெளியில் கோவையில் இயங்கிவரும் ஆட்டோக்களை ஆர்.டி.ஓ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவையில் வட்டார போக்குவரத்து அலுவலர்களின் பரிசோதனை நடந்து நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பார்ப்போம்.