திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட போலீஸ் நிலையங்களில் மது விலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 264 வாகனங்கள் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் நேற்று முதல் வருகிற 4-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் ஏலம் விடப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை வாகன ஏலம் நடைபெற்றது. வாகனங்களை ஏலத்தில் எடுக்க திருவள்ளூர், கடம்பத்தூர், திருப்பாச்சூர், மணவாளநகர், பூந்தமல்லி மற்றும் சென்னை என சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் காலையிலேயே திரண்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் வாகனங்களை ஏலம் எடுக்க வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்தனர். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே வாகன ஏலத்தில் கலந்துகொள்ள முடியும். நேற்று 55 வாகனங்கள் மட்டுமே ஏலம் விடப்பட்டது.

இந்த வாகனங்களை ஏலம் எடுக்க 300-க்கும் மேற்பட்டோர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டு ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு வந்தனர். பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல் திரண்டார்கள். அப்போது போலீசார் கூட்டத்தினரை கட்டுப்படுத்த சிரமப்பட்டனர்.
 
வாகனத்தை ஏலம் எடுக்க வந்தவர்களுக்கு இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீசார் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக டோக்கன் வினியோகம் செய்வதை நிறுத்திவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட பூந்தமல்லி மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
அதை தொடர்ந்து போலீசார் மேலும் 10 பேருக்கு மட்டும் டோக்கன் கொடுத்து உள்ளே அனுப்பினர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் ஏலத்தில் கலந்து கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதைத்தொடர்ந்து டோக்கனை பெற்றவர்கள் கடும் வெயிலில் நின்று ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி ஏலத்தில் கலந்து கொண்டு நீண்ட நேரம் போராடி வாகனங்களை ஏலத்தில் பெற்று சென்றனர். இதனால் நேற்று திருவள்ளூரில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here