தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 5 லட்சம் பணத்துடன் கீழே கிடந்த பையை எடுத்து உரியவரிடம் ஒப்படைக்க காவல்துறையினரிடம் ஒப்படைத்தவரின் நேர்மையை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் நேரில் அழைத்து சால்வை அணிவித்து கௌரவிப்பு.
கடந்த 17.03.2023 அன்று தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு நகைக்கடை அருகே யாரும் உரிமை கோராத நிலையில் ஒரு பை ஒன்று கிடைத்துள்ளது. இதனை பார்த்து அங்கு வந்த ஒரு நகைக்கடையின் உரிமையாளரான ஞானபால் என்பவர் அதனை எடுத்து பார்த்ததில் அதில் ரூபாய் 4,95,000/- பணம் மற்றும் ஜவுளிக்கடையில் வாங்கப்பட்ட புதிய சேலை ஆகியவை இருந்தது. இதனையடுத்து மேற்படி ஞானபால் நேர்மையுடன் அதை உரிமையாளரை கண்டுபிடித்து, உரியவரிடம் ஒப்படைக்க கோரி தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதனையடுத்து தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு மேற்படி பணத்துடன் பையை தவறவிட்டது தூத்துக்குடியில் நகைக்கடை நடத்தி வரும் ஆனந்த சுப்பிரமணியன் என்பவர்தான் என உறுதி செய்தனர்.
இதனையடுத்து நேர்மையாக செயல்பட்ட ஞானப்பால் என்பவரை இன்று (01.04.2023) தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, ஞானபால் மூலமே ஆனந்த சுப்பிரமணியனிடம் ரூபாய் 4,95,000/- பணம் மற்றும் புதிய சேலை ஆகியவற்றை நேரில் வழங்கினார். மேற்படி ஞானபால் நேர்மையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் அவருக்கு, சால்வை அணிவித்து கௌரவித்தார்.
இந்நிகழ்வின் போது மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கியப்பன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.