காபூல்:
ஆப்கானிஸ்தானில், துணை ஜனாதிபதியின் பாதுகாவலர்களை, குறிவைத்து நடந்த குண்டுவெடிப்பில், பொதுமக்கள், 10 பேர் பலியாயினர்; 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், இரு துணை ஜனாதிபதிகள் பொறுப்பில் உள்ளனர்.
இவர்களில், முதல் துணை ஜனாதிபதியான அம்ருல்லா சலே, நேற்று காலை, தன் இளைய மகனுடன் காபூல் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். பாதுகாப்பு படையினர், வாகனங்களில் அவரை பின் தொடர்ந்தனர்.
அவர்களின் வாகனங்கள், நகரில் ‘காஸ் சிலிண்டர்கள்’ விற்பனை செய்யும் பகுதியில் சென்ற போது, திடீரென குண்டு வெடித்தது. இதனால் ஏற்பட்ட தீ, ‘காஸ்’ சிலிண்டர்கள் விற்கும் கடைகளுக்கு பரவியதால், பெரும் தீ விபத்து ஏற்பட்டது.இந்த குண்டு வெடிப்பில், பொதுமக்கள், 10 பேர் பலியாயினர்.
துணை ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் உட்பட, 12க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல், துணை ஜனாதிபதியின் பாதுகாவலர்களை குறி வைத்து நடத்தப்பட்டதாக, உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.இந்நிலையில், ‘டிவி’யில் தோன்றிய முன்னாள் உளவுத்துறை தலைவரான துணை ஜனாதிபதி, அம்ருல்லா சலே, ”குண்டு வெடிப்பு சம்பவத்தால், எனக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. நானும், என் மகனும், நலமுடன் உள்ளோம்,” என்றார்.